Vidiyal

தாரிகா அழுவதற்கு கூட தெம்பற்று போயிருந்தாள். அறைக்குள் நுழைந்தவள் யன்னல் வழியே வானை வெறித்தாள். கருநீல வானிலே பிரகாசமாய் காட்சியளித்தது முழுநிலா கூடவே இருந்த நட்சத்திர பட்டாளம் கண்சிமிட்டி சிரித்தன. கார்மேகங்களும் ஒன்றை ஒன்று முட்டி மோதி விளையாடுவது போல் பாசாங்கு காட்டின. இவ்வியற்கை அழகை வழமை போல் அவளால் இரசிக்க முடியவில்லை. இதமான தென்றல் அவளை மிதமாய் வருடி அவள் உறவுகளால் துடைக்கப்படாத விழிநீரை உலர்த்தி சென்றது. முழுநிலவில் உள்ள பிரகாசம் தன் வாழ்வில் இல்லையே என்கின்ற ஆதங்கம், கண்சிமிட்டி சிரிக்கும் நட்சத்திரங்களால் முடிந்தது தன்னால் முடியவில்லையே என்ற கோவம், பாசாங்கு காட்டும் மேகங்களும் தன் உறவுகளை போலிருப்பதால் எழுந்த ஏமாற்றம் மதியிழக்க செய்தது. தன் வாழ்நாளை ஒருபிடி பெயர் தெரியா மாத்திரைகளால் முடித்துக்கொள்ள எண்ணி வெற்றியும் கண்டாள். கண்கள் சொருகிக்கொண்டு வர அறைகதவு தட்டப்படும் சத்தத்துடன் தினமும் இரசித்து கேட்ட அவளவனின் குரல். ஆனால் எழ கூட முடியாதிருந்தால். கதவு உடைக்கப்பட்டது தன்னவனின் முகத்தை கண்டாள் கூடவே தன்னுயிர் நிலாவையும் கண்டாள். செய்வதறியாது நிலவும் வழமை போல் தாரிகாவை திட்டிதீர்த்தாள். “நிலா என்னமா ஆச்சி என் பொண்ணுக்கு?  தாரிகாம்மா அம்மாவ பாருமா, யாரும் புரிஞ்சிக்கலனா பரவாயில்லமா  நா இருக்கேன்” என தன் அம்மா வாய்விட்டு அழுவதை பார்த்து “தப்பு செய்துட்டேன்மா மன்னிச்சிருங்க” என கூறி கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க தவித்தாள் தாரிகா. “தாரிகா என்ன மன்னிச்சிரு டி, உன்னோட கொஞ்சம் விளையாடினேன், ஏன் டி இப்படி பண்ணின? உன்னோட பிரச்னையெல்லாம் என் கிட்ட சொல்லிருக்கலாம் தானே? ” என கூற “தருண் என்ன எப்படியாவது காப்பாத்திரு அம்மா, நிலா, உன்னோடலா வாழ ஆசையா இருக்கு, யோசிக்காம தப்பு பண்ணிட்டேன்” என்றவளை அழுதவாறே வைத்தியசாலைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். இருந்தும் என்ன பயன்? தன்னவனின் மடியிலே அவள் விருப்பப்படி தாரிகா அவசரமாய்  தேடிய அமைதி கிடைக்கின்றது. யாரிந்த தாரிகா?

தாரிகா அழகான பெயர், எப்போதும் புன்னகையோடு, குறும்புத்தனமாய் சுற்றி திரியும் பெண் அவளது 18ம் வயது வரை. பாடசாலை பருவம் போல் வெளியுலகும் இருக்குமென சமூகத்தை நோக்கி வெளிவந்த பட்டாம்பூச்சி அப்போது உணரவில்லை சமூகம் எவ்வளவு பயங்கரமானதென. தாயின் கைக்குள்ளே, தன் குடும்பத்துக்குள்ளேயே வளர்ந்த அவளுக்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட தந்தையின் பிரிவு பல வருடங்களின் பின் சமூகத்தின் கேள்விகணைகள் வழியே அவளை தாக்குமென அறியவில்லை. பள்ளிகல்வியின் பின் உயர்கல்வியை தொடர்வதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்தி தர குடும்பம் மறுக்கின்றது. எதிர்த்து பேச தெரியாத அவளிடம் உயர்கல்விக்காகவும், தானக்கான வேலை என்கின்ற அடையாளத்திற்க்காகவும் பேச முயல்கின்றாள். இதனிடயே அவசரமான திருமண பேச்சு வார்த்தைகள். இதனிடயில் அவளுக்காய் அவள் உருவாக்கி கொண்ட, உடமையாக்கி கொள்ள ஆசைபட்ட  உறவுதான் தருண். அவளின் 20 வருட வாழ்க்கையில் இழந்தவற்றை அவனால் மட்டுமே திருப்பி தர முடியும் என ஆழமாக நம்பினாள். அவளால் அவள் உணர்வை காதல் என உடனே கூற முடியவில்லை, ஏனெனில் காதலென கைபிடித்து, ஊர் சுற்றி திரியும் சராசரி காதலர்களை அவளால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அதில் உடன்பாடும் அவளுக்கு இல்லை. தன் மீதியுள்ள ஆயுளை தருணுடன் பங்கிட்டுக்கொள்ள ஆசைபட்டாள், அதை மறைமுகமாய்  அவனிடம் தெரிவித்தும் விட்டாள். ஆனால் தோழியாய் பழகிவளை வாழ்க்கைத்துணையாக  உடனே ஏற்கும் பக்குவத்தில் தருண் இல்லை என்றே கூறலாம். அவனிடம் இருந்து விடுபட முயற்ச்சித்தும் பார்த்து தோல்வியடைந்தாள். ஆனால் அவனின் சீண்டல்களும் குறைந்தபாடில்லை தாரிகாவும் அதை சுவாரஸ்யமாக ஏற்றுக்கொண்டாள், மறுக்க முடியுமா அல்ல மறக்கத்தான் முடியுமா தன்னவனை?  இத்தனை சோகங்கள், கவலைகள், தோல்விகள் இருந்தும் அவளின் புன்னகைக்கும், வாழ்க்கைக்கும் ஆதாரம் அவளின் பிள்ளையாரும் நிலாவுமே தாரிகாவின் ஆறுதல். அவள் துவண்ட போதெல்லாம் அவளை தேற்றி அணைத்தது அவ்விருவருமே. இருந்தும் ஏனிந்த நிலைமை இவளுக்கு?  தன் அடையாளத்தை, தொழிலை, திறமையை வெளிகாட்ட முடியாத ஏமாற்றம்.  இவளால் வேண்டாமென மறுக்கப்படும் திருமணத்தை உறவுகள் வேண்டும் என்கின்ற சுதந்திரபறிப்பு. அனைத்திற்க்கும்  மேலாக பதில் கூறாது சீண்டிப்பார்க்கும் தருணுடனான எதிர்கால கனவுகள். இது பற்றி தருணுடன் பேசினால் அவனுடனானா நட்பை இழந்துவிடுவோமோ என்கின்ற பயம். இவை தான் காரணம். இவையா?  இவைதான்  பிரச்னைகளா? என்றால் “தற்கொலை என்கின்ற தீர்மானத்தை எடுக்கும் ஒரு நொடியில் கோழை கூட மாபெரும் வீரனாகின்றான்.” இங்கு  வேண்டாம் என்பதை கட்டாயப்படுத்தும் போது சுதந்திரபறிப்பு நிகழ்கின்றது, ஒரு உறவை இழந்துவிடுவோம் என்கின்ற போது ஒருவித பயமும்,  கலந்துரையாடல் நிகழாத போது மனநிலை பாதிப்பும் அடைகின்றது. முக்கியமாக உலகில் பிறந்து வாழ்வதற்க்கான உரிமையும், அடையாளமும், சுதந்திரமும் பறிக்கப்படும் போது தன் மீதே ஒருவித கோபமும், கையாளாகாத ஏமாற்றமும் ஏற்படுகின்றது.  திடமற்ற மனநிலை, பயம், ஏக்கம், ஏமாற்றம், கோபம் போன்ற சிறிய சிறிய உணர்வுகள் தற்கொலை என்கின்ற பாரிய முடிவிற்க்கு வழிவகுக்கின்றன. ஒவ்வொரு தற்கொலை நிகழும் போதும் சமுதாயம் என்ற வகையில் தலைகுனிய கடைமைபட்டுள்ளோம். காரணம் எம்மில் ஒரு உயிர் தற்கொலையை நாடி செல்லும் போது அதை தடுத்து தைரியம் வழங்க முடியாத, தயார் இல்லாத சமூகமாகிய நாம் வெட்கப்பட வேண்டியவர்களே!

“ரிங்ரிங் ரிங்ரிங்……………..” என அலைபேசி அலற சற்று அதிர்ந்தவள் திரையை பார்த்து புன்னகைத்தாள், திரை பூசணிக்கா என அழைப்பை காட்டியது.
“ஹலோ…………. ”
“தாரிகா, என்னடி பண்ணற?  சாப்டியா? நா உன்ன விட்டுட்டு பிரியாணி சாப்பிடுறேன் டி, ஹா ஹா ஹா…………… ” என்றாள் நிலா.
“………………………..” தாரிகாவின் மௌனம் அறியாதவளா நிலா!
“ஏய் தாரி, என்னடி ஆச்சி, சொல்லேன், ஒன்னும் சொல்லலனா எப்படி டி தெரியும்? வாய தெறந்து பேசேன்” என திட்டிதீர்த்தாள். அன்று நடந்த பிரச்னைகள், வாக்குவாதங்கள், உறவுகளின் சூடு சொற்கள் என அனைத்தையும் கூறி மனம் விட்டு அழுகின்றாள். “அட விடு டி, இதுலாம் ஒரு பிரச்னையா? நா இருக்கேன், பாத்துக்கலாம். வேலை தானே வேணும் உனக்கு இப்போ?  ரெண்டு பேரும் சேந்து தேடலாம். அப்பறம் அந்த தருண் பய அவன எனக்கு புடிக்காது தா இருந்தாலும் என்னோட தாரி குட்டிகாக அது கிட்ட நா பேசுறேன், அவளோ பெரிய ஆள அவன்?” என்றாள் நட்புடன் நக்கலாய். “சரி டி” என மெல்லிய சிரிப்புடன். இவள் ஒருத்தி போதும் வாழ்நாள் முழுவதும் என தாரிகாவிற்க்கு தோன்றியது. கைகளில் இருந்த பெயர் தெரியாத மாத்திரைகள் தாரிகாவினாலேயே தூக்கி ஏறியப்பட்டது.

“தாரிகா, தாரிகா என்னமா நடந்த சண்டைய நினைச்சிட்டு இருக்கியா?  அத விடு பாத்துகளாம் இப்போ வந்து சாப்பிடு”,  என தட்டி எழுப்பிய தாயை கண்டவள் என்றும் இல்லாதவாறு இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள். எதிர்புறம் இருந்த அவளின் பிள்ளையார் சாந்தமாய் அவளை பார்த்து புன்னகைப்பது நன்றாய் தெரிந்தது.
“சாப்பிட வா தாரிகா”,
“வாரேன் அம்மா, நீங்க போங்க” என கூறி அம்மாவை அனுப்பி விட்டாள்.  தான்னுடலின் உத்திரத்தால் உயிர் தந்து உத்திரத்தையே உணவாய் ஊட்டியவளின் கதறல் கனவாய் இருந்தாலும் தாரிகாவிற்க்குள் ஒலித்துக்கொண்டேயிருந்தது.  இமையோரம் வழிந்த கண்ணீரில் அனைத்தையும் கரைத்துவிட்டு புதியவளாய் தன் தீர்க்கமான முடிவை கூறி தன்னை அடையாளபடுத்த தன் உறவுகளை நோக்கி செல்கின்றாள், கூடவே பயத்தை போக்கி தன் கனவு மெய்படும் என்ற நம்பிக்கையில் தன்னவனை காண செல்கின்றாள் தாரிகா……………………..

“ஒரு சில சூழ்நிலைகளுக்காய், தோல்விகளுக்காய் தன்னுயிரை சுமையாக கருதி மாய்த்துக்கொள்ள புறப்படுவோருக்கு புரிவதில்லை அவரது தாயின் 10 மாத சுகமான சுமை, அவருக்கு புரிவதில்லை அவரது தந்தை சுமந்த தோள்களின் சுமை, தோல்கொடுத்த நட்பு இனியில்லை என்கின்ற மனச்சுமை, வாழ்க்கைதுணையின் வாழ்நாள் ஆசைகளின் எதிர்பார்ப்பு சுமை. இருந்தும் தவறு ஒருபுறம் அவர்களுடையது எனில் மறுபுறம் எம்மிலும் அதே தவறு இருக்கின்றது. உறவுகளாய், நண்பர்களாய் எம்மோடு அன்றாடம் பயணிப்பவர்களுக்கு நேரம் ஒதுக்கி பேச தவறும் போதே தற்கொலைகள் ஏற்படுகின்றன என்பது என் கருத்து. “ஒவ்வொரு தனிநபரினதும் வாழ்க்கையை தீர்மானிப்பதில் கலந்துரையாடல் முதன்மை பெறுகின்றது. எங்கு சுதந்திரமான கருத்துபகிர்வு நடக்கின்றதோ அங்கு உணர்வுபூர்வமான உறவுகள் தோற்றம் பெறுகின்றன.” எம்மிலும் பல தாரிகாக்கள் இருக்கலாம், அவர்களுக்கு நிலா போன்ற தோழிகளாய், உறவுகளாய் அவர்களின் பிரச்சனைகளை செவி கொடுத்து கேட்போம், தற்கொலைகளை தடுக்க முயல்வோம் இல்லை இல்லை முற்றிலும் தடுப்போம். இன்பமும், துன்பமும் உலக நியதி அதை புரிய செய்வோம்”

இதையும் மீறி தற்கொலை தான் அவசியமென நீ எண்ணினால் உன்னை உயிராய்  நேசிக்கும் தாயின் மலர்ந்த முகத்தை இறுதியாக நினைவுகூர்ந்து பார், அந்த முகத்திலுள்ள புன்னகையை முழுவதுமாய் பறித்துக்கொண்டு  இவ்வுலகை விட்டு போகின்றாய் சுயநலமாய்

Comments are closed.